×

பாகிஸ்தான் வீரர் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி ‘ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்…’ என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பதில்

சென்னிமலை: பாகிஸ்தான் வீரர் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்’ என பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் நேற்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்தார். அங்கு மூலவர் சன்னதியில் வழிபாடு செய்தார். பின்னர், கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் பேட்டி எடுத்தனர்.

அப்போது சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் போகும்போது ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த எல்.முருகன், ‘‘இதற்கு நான் பதில் வந்து ஒற்றை வரியில் சொல்லுனும்னா ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ராம்… ஜெய் ஸ்ரீராம்’’ என கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்… என கூறியபடி விலகி சென்றார். பின்னர் நிருபர்கள் வேறு கேள்விகளை கேட்பதாக தெரிவித்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘2014ம் ஆண்டுக்கு முன்பு தினமும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. மோடி பிரதமர் ஆன பிறகு ஒரு மீனவர்கள் மீது கூட துப்பாக்கிச்சூடு நடைபெறவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டி போகும்போது மட்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன.  வெளியுறவுத்துறை தலையிட்டு உடனடியாக மீனவர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறது. ஆழ்கடல் மீன் பிடிப்பு திறமையை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது.

பாக் ஜலசந்தியில் பிஸ் லாஞ்சிங் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை, வருமானத்துறையினர் தனி சுதந்திரமிக்க அமைப்பு. அவர்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் சோதனை நடத்துகின்றனர். பெண்களுக்கு 33 சதவீத இட ஓதுக்கீடு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் 2029ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்’ என்றார்.

The post பாகிஸ்தான் வீரர் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி ‘ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்…’ என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பதில் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,L. Murugan ,Chennimalai ,Sriram ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...